Saturday, December 11, 2010

தமிழிசையா?

May 2nd, 2009

அன்புள்ள ஜெ,
தமிழிசை குறித்த உங்கள் பதிவுகளையும், அதுகுறித்த தொடர்புடைய வாசகர்கள் அளித்த சுட்டிகளையும் படித்துவருகிறேன். இதுகுறித்து எனது ஞானம் மிகவும் கேள்விக்குறியது என்றாலும் இதுகுறித்து உங்களிடம் விரிவாக விவாதிக்க எண்ணுகிறேன். (தமிழ்நாட்டில் வேறு யாரும் இதற்கு எந்த முன்கணிப்புகளும் இல்லாமல் உரையாட தயாராக இல்லை என்பது திண்ணம்.)
தமிழிசை என்ற ஒன்று தனியாக இருந்ததாக நான் ஒப்புக்கொள்ள இயலவில்லை. செம்மொழிக்கான உரைபுகள் போல ஏதேனும் ஒன்று தென்னிந்தியாவில் இருந்திருக்க வாய்ப்பு நிச்சயம் உண்டு. ஆனால் பெரும்பாலான ஆராய்ச்சிகள் இவர்களது முன்கணிப்புகளுக்கான சாட்சிகளை, சான்றுகளை நிறுவும் நோக்கிலேயே இருப்பதால் தமிழ் இசைகுறித்த ஆய்வுகளை நான் இப்போது படிப்பதில்லை. இந்த ஆய்வுகள் இந்து ஞானமரபுகளில், வேதங்களில், யேசுவின் பிறப்பு ஏற்கனவே குறிக்கப்பட்டிருக்கிறது என்ற ஆய்வு அறிக்கைகள் போலவே இருக்கிறது.
பண்டிதர் எழுதிய ஆய்வுகளையும் மற்றதையும் முழுவதும் படித்து அறிந்துகொண்டு பிறகு வருகிறேன். இப்போதைக்கு சொல்வதெல்லாம், தனித்தமிழ் இசை என்ற ஒன்று இருந்ததாக சொல்லப்படுவதை நான் நம்பவில்லை. ஆய்வுகளை படித்த பின் இது முற்றிலும் மாறலாம் எனவே….அப்போதைக்கிப்போதே சொல்லிவைத்தேன்.
-ராம்

அன்புள்ள ஜெயமோகன்,
 
நீங்கள் சிலமுறைகள் குறிப்பிட்டு எழுதியிருக்கும் ஆபிரகாம் பண்டிதரின் இந்த ‘கருணாமிர்த சாகரம்’ என்கிற நூல் ஆங்கிலத்தில் வந்துள்ளதா?  அதை விடுங்கள் தமிழிசை என்று கூறப்படும் “பண்டைத் தமிழரின் பாரம்பரிய இசை பற்றியே கூட ஆங்கிலத்தில் ஆதாரபூர்வமான நூல்கள் வந்துள்ளனவா?  இல்லை என்றே நினைக்கிறேன். 
 
சமீபத்திய உங்கள்  பதிவு ஒன்றில் (http://jeyamohan.in/?p=2457) நீங்கள் இப்படி சொல்கிறீர்கள் -
 
// அதை ஏற்றுக்கொண்டால் இந்திய இசை என்பதே தொல்தமிழ் இசை என்பதை ஏற்றாகவேண்டும் என்பதனால் அது பெரும்பாலும் புறக்கணிக்கபப்டுகிறது என்று நினைக்கிறேன் //
 
எந்த கர்நாடக சங்கீதவியல் நிபுணர்கள் (musicologists)  இதனை புறக்கணித்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? 
 
// கர்நடக சங்கீதத்தின் ராகங்கள் என்ந்த அடிபப்டையில் கணக்குபடுத்தப்பட்டுள்ளன என்பதே அது. சாரங்கதேவரின் ‘சங்கீத ரத்னாகரம்’ முதலிய நூல்களில் இசையின் ராகப்பிரிவினைகள் உள்ளனவே அல்லாமல் அதன் கணிதம் இல்லை என்கிறார் பண்டிதர். //
 
சாரங்க தேவரின் நூல் காலத்தால் மிகவும் பிற்பட்டது – கி.பி 13 அல்லது 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல் அது.  இந்தக் காலகட்டத்தில், கர்நாடக சங்கீதம்,  மிக நேர்த்தியடைந்த (sophistication) ஒரு வடிவத்தை நோக்கி வரத் தொடங்கி விட்டது.  அதற்கும் முற்பட்ட ‘பிருஹத்தேசி (மாதங்கர் இயற்றியது)  என்ற நூலிலேயே ராக வடிவங்கள் கூறப் பட்டு விட்டன.
 
அதை விட அடிப்படையான சப்தஸ்வரங்கள், ராகம், தாளம் ஆகியவற்றிற்கான கோட்பாடுகள் எங்கே உள்ளன?  பரத முனிவரின் “நாட்டிய சாஸ்திரம்”  என்ற நூலில்.   கி.மு 2-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.;பி முதல் நூற்றாண்டுக்கு உட்பட்டது இந்த நூலின் காலம் என்பது பொதுவாக ஏற்கப் பட்ட கருத்து.  கலை ஆய்வாளர் கபிலா வாத்ஸ்யாயன் உள்ளிட்ட அறிஞர்கள் இந்த நூலின் ஒழுங்கை வைத்துப் பார்க்கையில் இது பலரால் அல்ல, ஒருவராலேயே இயற்றப் பட்டிருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.  ஏழு ஸ்வரங்களில் முதலாவதான “ஸ”வுக்கு ஷட்ஜம்  (ஆறு ஸ்வரங்களையும் பிறப்பிப்பது)   என்ற பெயரை இந்த நூலே அளித்தது.  ராகங்களைத் தோற்றுவிக்கும் அடிப்படை அலகான “ஜதி”  என்ற கோட்பாட்டையும்,  ஸ்ருதி, லயம், தாளம் ஆகிய கோட்பாடுகள்,  இசைக்கும் பாவம் (bhava), ரசம் ஆகியவற்றுக்கும் உள்ள தொடர்பு இவை அனைத்தையும் பரத முனிவரின் நாட்ய சாஸ்திரம் விளக்கி விட்டது.   பிறகு ஏற்பட்ட வளர்ச்சி என்பது ராகங்களை  அடையாளம்  கண்டதும், அட்டவணைப் படுத்தியதுமே.  
 
நாட்ய சாஸ்திரம் போன்று *இலக்கண நூல்*  தொல் தமிழில் இல்லை.  நமக்குக் கிடைப்பவை இலக்கியங்களில் இசை பற்றி வரும் குறிப்புக்களே.  அது போன்ற குறிப்புக்கள்  உபநிஷதங்கள், பிராமணங்கள், ராமாயணம், மகாபாரதம் ஆகிய தொல் சம்ஸ்கிருத நூல்களிலும் நிரம்ப உள்ளன.
   
எனவே தமிழிசையின் தொன்மை பற்றிய கருத்தாக்கங்கள் வேண்டுமென்றே *புறக்கணிக்கப் படுகின்றன* என்று நீங்கள் எழுதுவதற்கு ஆதாரம் இல்லை.  சொல்லப் போனால் அவை ஒரு வட்டத்தைத் தாண்டி ”இந்திய இசை” வரை பேசப் படும் அளவுக்கு முன்வைக்கப் படவே இல்லை. இங்கு தமிழிசை பற்றி,  அதிலும் குறிப்பாக “அதுவே ஆதி முதல் இசை” என்ற ரீதியில்உரத்துப் பேசுபவர்கள் பலருக்கு  இந்திய இசை/கலைப் பாரம்பரியம் பற்றிய முழுமையான பிரக்ஞை இல்லை. கலைச் சொற்கள் மற்றும் அடிப்படை சம்ஸ்கிருத பரிச்சயம் கூட இல்லை,  சம்ஸ்கிருத வெறுப்பிலும், ஒரு வகைக் காழ்ப்புணர்ச்சியிலும் ஊறித் திளைத்திருப்பவர்கள் இவர்களில் பெரும்பாலர். ஆய்வாக இல்லாமல் கோஷமாகவே கருத்துக்களை முன்வைப்பவர்கள்.
 
நீங்களும் இந்த கோஷ எதிரொலி போன்றே எழுதுவது வருத்தமளிக்கிறது,
 
அன்புடன்,
ஜடாயு
 
அன்புள்ள ஜடாயு,
முதலில் நான் இந்தவிஷயத்தில் ஒரு நிபுணனோ, குறிப்பிடும் அளவுக்குக் கற்றறிந்தவனோ கூட இல்லை. என் அறிதல்கள் சில நூல்களில் இருந்தும் விஷயமறிந்த நண்பர்களிடம் இருந்தும் பெற்றுக்கொண்டவையே. ஆகவே இலக்கியம், தத்துவம் ஆகிய தளங்களில் நான் பேசுவதுபோல திட்டவட்டமாக எதையும் சொல்லத்தயங்குகிறேன். சில விஷயங்களை மேலோட்டமாக பேசவிரும்புகிறேன்.
சாரங்கதேவரின் சங்கீதரத்னாகரம் என்னும் நூலின் அடிப்படையில்தான் இன்று சங்கீதத்தின் இலக்கணங்கள் பேசப்படுகின்றன. அவர் ஹைதராபாதிலும் பின்னர் தஞ்சைமராட்டியர் அவையிலும் வந்து தங்கியிருந்து கற்றுக்கொண்ட இசை அடிப்படைகளைத்தான் தன் நூலில் தொகுத்து எழுதினார். அவருக்கு அந்த இலக்கணங்களை அளித்தவர்கள் அப்போது இந்த அவைகளில் இருந்த இசைக்கலைஞர்கள்.
நீங்கள் சொல்வதுபோல அப்போது கர்நாடக சங்கீதம் – அல்லது இந்திய சங்கீதம் முழுமையான வளர்ச்சியுடனும் பொலிவுடனும் இருக்கவில்லை. அது பலவகையில் திரிந்தும் சிதறியும்தான் இருந்தது. அக்காலகட்ட வரலாற்றுச் சூழலை வைத்தே இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வட இந்தியா பன்னிரண்டாம் நூற்றாண்டுமுதல் கடுமையான அன்னிய ஆக்ரமிப்புகளை சந்தித்தது. டெல்லியில் சுல்தான்களின் ஆட்சி ஆரம்பித்தது. இந்தியாவில் இருந்த இந்து,சமண அரசுகள் பெரும்பாலும் சிதைந்தழிந்தன. நாலந்தா உட்பட பௌத்தமையங்கள் அழிக்கப்படன. சுல்தான்களின் ஆட்சி இந்தியக்கலைகளுக்கும் சிந்தனைக்கும் எதிரானதாக இருந்தது.
தென்னிந்தியாவில் 1310ல் டெல்லிசுல்தான்களின் தளபதியான மாலிக் கா·பூரின் படையெடுப்பு நடந்து இங்கிருந்த அரசுகள் அழிந்தன. கோயில்கள் சூறையாடப்பட்டு கற்குவியல்களாக ஆயின. சிதம்பரம்,ஸ்ரீரங்கம்,மதுரை போன்றகோயில்கள் எல்லாமே அழிக்கப்பட்டு தமிழகம் பொலிவிழந்தது. கோயில்களைச் சார்ந்து இயங்கிய கலைகள் ஆதரவிழந்து சிதைந்தன. தமிழகத்தின் கலைகளுக்கு அது இரண்டாவது இருண்டகாலகட்டம்
அதன்பின் இருநூறுவருடம் கழிந்து விஜயநகரம் உருவாகி மீண்டும் தென்னிந்தியாவில் கோயில்கள் புத்துயிர்கொண்டன.  1509ல் மதுரையிலும் பின் தஞ்சையிலும் நாயக்கர் ஆட்சி உருவானது. அதன்பின்னர் தஞ்சை மராட்டியர் கைக்குச் சென்றது. இவ்வாறாக, சிலநூற்றாண்டு இடைவெளி தாண்டி, மீண்டும் தென்னிந்தியாவில் கோயில்கள் மீண்டும் புத்துயிர்கொண்டன. கோயில்களையும் அரசசபைகளையும் சார்ந்து மரபிசை மீண்டும் துளிர்க்க ஆரம்பித்தது.
அந்த சிதைவின் காலகட்டத்தில்தான் சாரங்கதேவர் அவரது நூலை எழுதினார். மிகவிரிவாகப் பயணம்செய்து அன்றிருந்த உதிரி அரசபைப் பாடகர்களைச் சந்தித்து தன் இசையறிவைபெருக்கிக் கொண்டு அதனடிப்படையில் தன் நூலை உருவாக்கினார். உண்மையில் அதற்குப்பின்னர்தான் மெல்லமெல்ல தென்னிந்தியஇசை மலர்ச்சி கண்டது. சாரங்கதேவர் உருவாக்கிய இசையிலக்கணம் அதற்கு உதவியது. தஞ்சைமராட்டியரின் அரசசபை தென்னிந்திய இசை வளர்ச்சிபெறுவதற்கான களமாக அமைந்தது. நாம் இன்று காணும் கர்நாடக சங்கீதம் என்பது அவர்களின் காலகட்டத்தில், பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் படிப்படியாக உருவானதேயாகும்.
வடநாட்டில் சுல்தான்களின் ஆட்சிக்குப்பின்னர் மொகலாயர் ஆட்சி உருவானபோது மீண்டும் இசை மலர்ச்சி அடைந்தது. ஹ¤மாயூன் இசையில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். துருபத் சங்கீதம் என்றபேரில் கைவிடப்பட்ட கோயில்களில் முடங்கி ஆதரிப்பார் இல்லாமலிருந்த இந்திய இசையை அவர் தன் சபைக்குக் கொண்டுவந்தார். அதனுடன் ஆப்கானிய இசை கலந்தது. விளைவாக இந்துஸ்தானி இசை உருவானது. ஷாஜகானின் அரச சபை அதன் பொற்காலத்தை உருவாக்கியது. பொறுமை இழந்த ஔரங்கஜீப் அதை அரசபையில் இருந்து துரத்தினார்.
இந்துஸ்தானி இசைக்கென சிறந்த இசை இலக்கணமோ முக்கியமான நூல்களோ இல்லை என்றுதான் சொல்கிறார்கள். அது வெவ்வேறு குருகுல அமைப்புகள் [கரானாக்கள்] மூலம் கற்றுக்கொள்ளப்பட்டு கைமாறுகிறது என்கிறார்கள்.
சொன்னதை மீண்டும் சொல்கிறேன். தமிழகத்தின் இசை மரபைப்பற்றிய விவாதத்தில் இரண்டு ‘இருண்ட’ காலகட்டங்கள் பேசப்படுகின்றன. முதல் காலகட்டம் களப்பிரர்களுடையது. அவர்கள் தத்துவம், மருத்துவம் போன்ற துறைகளில் மறுமலர்ச்சியை உருவாக்கினார்கள். இசைக்கு எதிரானவர்களாக இருந்தார்கள். கோயில்கள் பொதுவாக கைவிடப்பட்டன. தமிழ்நாட்டின் இசையின் தொடர்ச்சி அறுபட்டது அப்போதுதான்.
அதன்பின்னர் அந்த இசை மரபு  ஆழ்வார்களாலும் நாயன்மார்களாலும் மீட்டு மறு ஆக்கம்செய்யப்பட்டது. இன்றும் ஓதுவார் மரபாக அதன் நீட்சி உள்ளது. அந்த மரபு மாலிக் காபூருக்குப் பின் நாயக்கர் காலம் வரையிலான ஒன்றரை நூற்றாண்டில் மீண்டும் அறுபட்டது. அதை மீட்டுருவாக்கம்செய்தவர் சாரங்கதேவர். அப்போது அவர் அவர் அறிந்தவகையில், வடஇந்திய கோயில்களில் இருந்த இசையின் கலைச்சொற்களைக் கொண்டு அதை அமைத்தார். அதுவே இன்றும் தொடர்கிறது.
நான்  இதிகாசங்களையும் காளிதாச காவியங்களையும் கவனித்து வாசித்திருக்கிறேன். நான் அறிந்தவரையில் சிலப்பதிகாரம் போன்றவற்றில் இருப்பது போல.இசையின் இலக்கணங்கள் அவற்றில் பேசப்படவில்லை. அவற்றில் பேசப்பட்டிருக்கும் இசை chanting என்னும் வகைப்பட்டது என நான் நினைக்கிறேன். ஒத்திசைவுள்ள பாட்டுமுறைதான் அது. அதற்கு சந்தஸ் போன்ற உச்சரிப்பு, ஒலியிசைவு சார்ந்த பற்பல இலக்கணங்கள் உள்ளன. அதன் மூலவடிவம் சாமவேதம் சார்ந்தது.
இந்திய இசையின் தனிச்சிறப்பான அம்சமே  அதன் ஆலாபனை என்னும் இயல்புதான். அந்த ஆலாபனைசார்ந்த இசைக்கான ராக இலக்கணங்களும், அவற்றுக்குரிய துணைக்கருவிகளின் இலக்கணங்களும் தமிழ் நூல்களிலேயே துல்லியமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. பல இசைஇலக்கண நூல்கள் இருந்திருக்கின்றன. சிலப்பதிகாரமே அவற்றைப்பற்றிய குறிப்புகளை அளிக்கிறது. இந்த இசையின் ஊற்றுமுகம் தென்னகமாக இருக்கலாமெனக் கொள்ள இவையே போதுமானது. இந்த இசை இந்தியாவெங்கும் பரவியிருந்தது என்றே கொள்ளவேண்யிருக்கிறது.
பரதமுனிவரின் நாட்டிய சாஸ்திரம் நான் கவனித்து படித்த ஒன்றல்ல. விஷ்ணுபுரம் நாவலுக்காக ஒரு வாசிப்பு மட்டுமே கொடுத்திருக்கிறேன். அது ராகம்-தாளம்-பாவங்கள் சார்ந்து ஓரளவுக்கு தகவல்களை அளிக்கிறது. நாட்டியத்துக்குரிய ரசங்களை [மெய்ப்பாடுகளை] அது பேசுவதுடன் அதற்கான இசையையும் விவரிக்கிறது. ஆலாபனை என்னும் தனித்தன்மைகளை அது பேசியதாகத் தெரியவில்லை.
தமிழிசை ஆய்வாளரான ஆபிரகாம் பண்டிதர் தன்னுடைய ராகங்கள் குறித்த கோட்பாட்டை சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் இருந்து உருவாக்கிக் கொண்டு ராகங்களை உருவாக்கும் கணிதமுறையை வகுக்கிறார். இந்த ராகபுடம் என்னும் முறையை இசையறிந்த நீங்கள் கவனிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.  பரதமுனிவரின் நூலையும் சாரங்கதேவரின் நூலையும் பலநூறு பக்கங்களுக்கு பண்டிதர் விரிவாக ஆராய்கிறார்.  கிட்டத்தட 1000 பக்கங்கள் கொண்ட அந்நூலை வாசித்து ஆராய்ந்தபின்னர்தான் நீங்கள் விரிவான விவாதங்களுக்க்குள் செல்ல முடியும். அதாவது நீங்கள் விவாதிக்க வேண்டியது அந்த நூலிடம்.
இப்படி ஒரு இலக்கணம் இன்றுவரை இந்துஸ்தானி இசைக்கு உருவாக்கப்படவில்லை என்பதே நான் அறிந்தது. ஆபிரகாம் பண்டிதர் பரோடாவில் நிகழ்ந்த அகில இந்தியமாநாட்டில் கலந்துகொண்டு தன் தரப்பை முன்வைத்திருக்கிறார். அவரது நூலின் பெரும்பகுதி ஆங்கிலத்தில் அவர் காலகட்டத்திலேயே வெளிவந்துவிட்டது. அவரது மைந்தர்களும் அதன் பல பகுதிகளை ஆங்கிலத்தில் கொண்டுவந்திருக்கிறார்கள். தமிழிசை இலக்கணம் குறித்து ஆங்கிலத்தில் இன்று ஏராளமான நூல்கள் கிடைக்கின்றன
ஆனால் வட இந்தியாவில் இந்திய இசைகுறித்து எழுதப்பட்ட எந்த ஒரு நூலிலும் ஆபிரகாம் பண்டிதரைப்பற்றியோ அல்லது அவரது கருத்தைப்பற்றியோ எதையுமே காணமுடியாது. ஏன் தமிழ்நாட்டைச்சேர்ந்த பத்மாசுப்ரமணியம் நாட்டியம் இசை பற்றியெல்லாம் ஏராளமாக ஆய்வுநூல்களை எழுதியிருக்கிறார். வழக்கமான ‘சாமவேதம்-பரதமுனிவர்- சாரங்கதேவர்’ இதுவே அவரது பாதையாக இருக்கிறது. ஒருமுறை நானே மலையாள மனோரமா இயர்புக்குக்காக பரணி என்பவர் எழுதிய தமிழ்நாட்டு இசை பற்றிய ஒரு கட்டுரையை மொழியாக்கம் செய்தேன் – ஆபிரகாம் பண்டிதர் பற்றியோ தமிழ் மரபைப்பற்றியோ ஒரு வரிகூட இல்லை அதில். நம்முடைய இசைக்கல்லூரிகளின் பாடநூல்களில் எதிலும் ஆபிரகாம் பண்டிதரைப்பற்றி எந்தக் குறிப்பும் கிடையாது. நான் நான்கு பாடநூல்களை பார்த்திருக்கிறேன்.
ஒருவேளை இந்திய இசையின் ஊற்றுக்கண்ணே சாமவேதமாக இருக்கலாம். ஆனால் ஒரு மாற்றுத்தரப்பு முன்வைக்கப்பட்டிருக்கிறதல்லவா? அதைப்பற்றி பொருட்படுத்தி விவாதிக்கலாம். அல்லது அதற்கு ஒரு மறுப்பாவது சொல்லலாம் அல்லவா? அலட்சியமான ஒரு போக்கு மட்டுமே காணக்கிடைக்கிறது.
நீங்கள் சொல்வது உண்மை. தமிழியக்கம் சார்ந்து பேசுபவர்கள் எல்லாவற்றையும் வெறுப்பில் இருந்து உருவாக்கிக் கொள்கிறார்கள். அனைத்தையுமே வெறுப்பைப் பரப்புவதற்கான கருவிகளாக ஆக்குகிறார்கள். எதையுமே ஆய்வுநேர்மையுடன் ,சமநிலையுடன்,  உண்மையான கல்விப்பின்புலத்துடன் பேசுவதில்லை. கோஷமிடுவதே அவர்களின் வழியாக இருக்கிறது.
ஆனால் அதற்கு நேர் எதிர்தரப்பில் — பிராமணவாத நோக்கு கொண்டவர்களைத்தான் சொல்கிறேன்- அதற்கு இணையான மூடத்தனமும் பிறரை துச்சமாக எண்ணும்  அலட்சியமும் இருக்கிறது.  வரலாற்றைப் பற்றிய கவலையே இல்லாமல் தங்கள் பண்பாட்டுமேன்மைகளை கற்பிதம் செய்துகொண்டு அதையே மீண்டும் மீண்டும் முன்வைக்கும் போக்கு இருக்கிறது.  வெறுப்புக்கு எதிரான வெறுப்பாக இருதரப்பையும் நான் காண்கிறேன். இரண்டுமே உண்மையான பண்பாட்டுப் பரிமாற்றத்துக்கு உகந்தவை அல்ல.
இந்த மண்ணின் பண்பாடு ஏதேனும் ஒரு புனித புள்ளியில் இருந்து ஊற்றெடுத்தது அல்ல. இந்த மண் முழுக்க பலகோடி மக்கள் பல்லாயிரம் வருடங்களாக வாழ்ந்து உருவாக்கிய பண்பாட்டுத்தரப்புகள் ஒன்றுடன் ஒன்று உரையாடி ஒன்றை ஒன்று வளர்த்து உருவானது அது.  ஏதேனும் ஒரு புள்ளியில் அதை குறுக்கும் எந்த முயற்சியும் -அது வடக்காக இருந்தாலும் தெற்காக இருந்தாலும்– ஆபத்தானதே
ஜெ

தமிழிசை: காழ்ப்பே வரலாறாக…

வரலாற்றில் எப்போதுமே சில அம்சங்கள் தவிர்க்கமுடியாமல் உள்ளன. அது பெரும்பாலும் வென்றவர்களால் எழுதப்படுகிறது. நெடுங்கால வரலாற்று பகைமைகளும் ஐயங்களும் வரலாற்றுத்தகவல்களில் இருந்து வரலாற்றுண்மைகளை பிரித்தெடுப்பதில் பங்கு வகிக்கின்றன. ஆகவே காழ்ப்பு அம்சம் இல்லாத வரலாறு எங்கும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் சென்ற ஐம்பதாண்டுக்காலத்தில் தமிழகத்தில் உருவாக்கப்பட்ட பண்பாட்டு வரலாறு என்பது ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை தாழ்வுணர்ச்சியின் விளைவான காழ்ப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
நானறிந்தவரை இவ்வாறு தன்னுடைய மொத்தவரலாற்றையே ஒரு பெரும் தோல்வியாக உருவகித்துக்கொண்டிருக்கும் சமூகம் வேறெங்காவது இருக்குமா என்று தெரியவில்லை. அந்த தோல்விகளுக்கெல்லாம் தன்னுடைய மூதாதையரின் மண்ணாந்தைதனமும் மாற்றாரின் அளவிடமுடியாத மதியூகித்தனமும்தான் காரணம் என்று நம்பி அதையே அறிவார்ந்த விவாதமாக பேசிக்கொண்டிருக்கும் எவராவது வேறெங்காவது இருப்பார்களா? ஐயம்தான்.
சமீபத்தில் ஓர் விவாதக்குழுமத்தில் நண்பர் ஒருவர் தமிழிசை பற்றி ஒரு கருத்தை எழுதியிருந்தார். உண்மையில் அவர் ஒரு சிறிய குறிப்பு தான் எழுதியிருந்தார். அது பொதுவான ஒன்று. அதில் இசை முதல் சமகால அரசியல் வரை எல்லா தளத்திலும் நம் பொதுப்புத்தி சார்ந்து முன்வைக்கப்பட்டிருக்கும் கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தன. அதில் ஒன்று சென்னை சங்கீத சபாக்களுக்கு எதிரான குமுறல்.திருவிழாக்களிலும் கல்யாணவீடுகளிலும் வாழ்ந்துகொண்டிருந்த இசையை சபாக்கள் மூலம் பிராமணர் அழித்தார்கள் என்றார் நண்பர்.
அந்த சபாக்களால் முன்னிறுத்தப்பட்ட தமிழ்நாட்டின் பிராமண இசைவாணர்கள் அனைவரும் தமிழ்மேல் காழ்ப்புகொண்டவர்கள், தமிழிசையை அழிக்கும் நோக்கம் கொண்டவர்கள், தமிழைப்பாட திட்டமிட்டு மறுத்து மாற்றார் இசையை முன்னிறுத்துபவர்கள் என்பது அந்த தரப்பு. தமிழிசைவாணர்கள் என அவர் நினைக்கும் மதுரைசோமு போன்றவர்களை சபாக்கள் திட்டமிட்டு புறக்கணித்தன என்கிறார்.
நான் அவருக்கு கொஞ்சம் கோபமாக பதில் எழுதினேன். என் முதல் கேள்வியே இதுதான். பிராமணர் தமிழிசையை அழிக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம், நீங்கள் பேணவேண்டியதுதானே? உங்கள் கல்யாணவீடுகளிலும் திருவிழாக்களிலும் மரபிசை பாடக்கூடாதென யார் தடுக்கிறார்கள்? மரபிசைக்காக நீங்கள் உங்கள் குடும்பங்களில் யாருக்காவது இசையை கற்றுத்தருகிறீர்களா என்ன? இசைக்காக என்ன செய்தீர்கள்? நீங்கள் மரபிசையை கைவிட்டமைக்கும் ’பாப்பான்’ தான் காரணமா? பொதுமேடை ஒன்றில் ஒரு கருத்தை முன்வைப்பதற்கு முன் அதற்கான அடிப்படை வாசிப்பைச் செய்ய வேண்டாமா?
இசை வரலாற்றையே பார்ப்போம். மாலிக் காபூர் படை எடுத்துவந்த 1296 – 1316 முதல் தமிழ்நாட்டில் அன்னிய ஆட்சி நிலவியது. இங்கிருந்த அரசுகள் சிதறின. தமிழ்பக்தி இயக்கம் அதன் கடைசிநிலையை அடைந்து மறைந்தது.இஸ்லாமிய ஆட்சியாளர்களிடமிருந்து மராட்டிய நாயக்க மன்னர்கள் தமிழ்நாட்டைகைப்பற்றி ஆண்டார்கள். இந்தக்காலகட்டத்தில் பக்தி இயக்கத்தில்மறுமலர்ச்சி கண்டிருந்த தமிழிசையும் இலக்கியமும் பெரும் பின்னடைவு கண்டன.மீண்டும் அவை பதினேழாம் நூற்றாண்டில்தான் மெல்ல தலையெடுத்தன. இலக்கியம்சிறிய பாளையக்காரர்கள் மற்றும் நிலப்பிரபுக்களை நம்பி தங்கிப்பிழைத்தது.இந்த சின்ன மன்னர்களின் சின்ன ரசனைக்குரிய சின்ன இலக்கியங்கள் உருவாகின. அவை சிற்றிலக்கியங்கள் எனப்பட்டன. கலம்பகங்கள், குறவஞ்சிகள், தூதுகள், உலாக்கள்.
தமிழ்மரபிசை இக்காலகட்டத்தில் மூன்று வழிகளாக பிரிந்து நீடித்தது. ஒன்று , ஓதுவார்களின் பண்ணிசை. அது ஆலயங்களையும் மடங்களையும் நம்பி வாழ்ந்தது.அதுவே பக்தி இயக்கத்தின் பாரம்பரியத்தை கொண்ட மைய ஓட்டம். இன்னொன்று இசைவேளாளர்களின் நாதஸ்வர இசை. அல்லது விழா இசை. இது மக்களின் தேவைகளை ஒட்டி தாக்குபிடித்தது. மூன்று அரசசபை சார்ந்த இசை. இதுவும் சிறியமன்னர்களின் சபைகளைச் சார்ந்து வளர்ந்தது.
முதல் இரண்டுக்கும் பெரிய ஊக்கம் கிடைக்கவில்லை, ஆகவே வளர்ச்சியும் நிகழவில்லை. காரணம் அவை தமிழ்ப்பண்பாட்டுடன் பிணைந்தவை. ஆட்சியாளர்கள் தமிழறியாதோர். ஆனால் சபையிசை தன்னை தெலுங்குக்கும் சம்ஸ்கிருதத்துக்கும்மாற்றிக்கொண்டு ஆதரவு பெற்றது. 1700களில் , சொல்லப்போனால் தஞ்சைமராட்டியர் சபைகளில் இந்த இசை மெல்ல பிராமணர்களின் கைக்கு வந்தது.
பொதுவாக தமிழகத்தில் இசை பிராமணர்களின் தொழில் அல்ல. ஆலயச்சடங்குகளுக்கான தோத்திரங்கள் மட்டுமே அவர்களுக்குரியவை. ஆனால் பதினேழாம் நூற்றாண்டில்அவர்கள் இசைக்குள் நுழைந்து சட்டென்று மேலாதிக்கம் பெற்றார்கள்.அதற்குக் காரணம் விஜயநகர சபையிலும் மராட்டியர் அவையிலும் பிராமணப்பாடகர்கள் இருந்தவர்கள் என்பதே. அவர்களிடமிருந்து இசைப்பண்பாடு இங்கே
வந்தது. இங்கே இசையை தொழிலாக எடுத்துக்கொண்ட பிராமணர்கள் பலரும் தெலுங்குப்பிராமணர்கள்.
அப்போது தமிழின் இசையிலக்கண நூல்கள் முற்றிலும் அழிந்திருந்தன. இசைமுழுக்கமுழுக்க குருமுறைகளில் செவிவழியாக கற்கப்பட்டது. அந்நிலையில் பிராமணர்கள் அன்று வடக்கே இருந்து மராட்டியர் வழியாக அவர்களுக்கு கிடைத்த ஒரே இசைநூலான சாரங்கதேவரின் சங்கீத ரத்னாகரம் நூலை ஒட்டி இசையை இலக்கணப்படுத்திக்கொண்டு புத்துயிர்கொடுத்தார்கள். அதுவே கர்நாடகசங்கீதம்.
தென்னகத்துக்கு அன்று முகலாய ஆவணங்களில் ஒட்டுமொத்தமாக கர்நாடகம் என்றுதான் பெயர். சாரங்கதேவர் தேவகிரியில் யாதவமன்னர்களின் அரசவையில் இருந்தார். யாதவ அரசுக்கு கர்நாடக அரசு என்று பெயருண்டு. அவ்வாறுதான் அப்போது தென்னகம் தழுவி உருவான இசை கர்நாடக இசை எனப்பட்டது.
இவ்வாறாக தமிழிசை அதன் வளர்ச்சிப்போக்கில் தென்னகஇசையாக ஆகியது. அதில் தமிழ்மொழிக்கிருந்த மையஇடம் இல்லாமலாகியமை இயல்பானதே. அதில் தெலுங்கு, கன்னடம், சம்ஸ்கிருதம் ஆகியவைமுக்கியமான இடம் பெற்றன. அன்று தென்னாடே தெலுங்கர்களால் ஆளப்பட்டமையால் தெலுங்கு மைய இடம் பெற்றது.
மலையாளத்திலும் முக்கியமான பல இசைப்பாடல்கள்அக்காலம் முதல் உருவாயின. ஷட்கால கோவிந்தமாரார், இரயிம்மன் தம்பி,சுவாதித்திருநாள் போன்றவர்களின் ஆக்கங்கள். அவையும்முக்கியத்துவம்பெறவில்லை. கேரளத்திலும் தெலுங்குப்பாடல்களே அதிகமாகப் பாடப்பட்டன- மன்னரே மலையாளத்தில் பாடல்புனைந்த இசைமுன்னோடியாக இருந்தபோதிலும்கூட!
முகலாய ஆட்சிக்காலத்தில் இந்தியாவெங்குமுள்ள மரபிசைகள் ஒன்றுடன் ஒன்று உரையாடின. அரேபிய இசையும் பாரசீக இசையும் அவற்றுடன்இசைப்பரிமாற்றம்செய்தன. விளைவாக உருவானதே இன்றைய இந்துஸ்தானி இசை.இந்துஸ்தானி இசையுடன் நேரடியாக தொடர்புகொள்ளும் வாய்ப்பு சபையிசைக்கே இருந்தது. அந்த தொடர்புமூலம் அது சட்டென்று பலமடங்கு விரிவுகொண்டது.புதிய ராகங்களும் பாடுமுறைகளும் கருவிகளும் உள்ளே வந்தன. இன்றைய கர்நாடகசங்கீதத்தின் முகம் உருவாகியது.
ஆனால் இந்த ஆதரவு ஒரு நூற்றாண்டுகூட நீடிக்கவில்லை. மிக விரைவிலேயே தமிழகஅரசியல்சூழல் மாறியது. இசைக்கு புரவலர்களாக இருந்த மன்னர்கள்அழிந்தார்கள். கர்நாடக இசைக்கும் எந்தவிதமான புரவலர்களும் இல்லாத நிலை.கர்நாடக இசைமுன்னோடிகள் கடுமையான வறுமையில்தான் இருந்தார்கள். முத்துசாமி தீட்சிதர் கால்நடையாகவே பஞ்சம்பிழைக்க எஞ்சிய ஒரே சமஸ்தானமான எட்டயபுரத்துக்கு வந்து நோயுற்று இறந்தார்.
ஆனால் அந்த இசை முன்னோடிகளின் சீடர் பரம்பரை பிடிவாதமாக இசையைமுன்னெடுத்தது. கடும் வறுமையில், புறக்கணிப்பில் ஒரு நூற்றாண்டுக்காலம் அவர்கள் இசையை தங்கள் குல ஆசாரம் போல கடைப்பிடித்தார்கள்.குடும்பத்தினருக்கு கற்றுக்கொடுத்தார்கள். கலையும் சிந்தனைகளும் இலக்கியமும் சோறுபோடாது. ஆனாலும் சோறில்லாத போதும் அவற்றை பாதுகாக்கும் சமூகங்களே வரலாற்றில் வெற்றிகொள்கின்றன. பிராமணர்களின் போற்றத்தக்க அந்தப்பிடிவாதமே இன்றைய கர்நாடக சங்கீதத்தை இவ்வடிவில் நிலைநிறுத்தியது.
பிரிட்டிஷ் ஆட்சி வந்தது. பிராமணர்கள் சட்டென்று ஆங்கிலக்கல்வி மூலம் அதன் பகுதியாக ஆனார்கள். கும்பகோணமும் அதன்பின் சென்னையும் அவர்களின் மையங்களாக ஆயின. ஆகவே கர்நாடக சங்கீதத்துக்கு புரவலர் அமைந்தார்கள். அது புத்துயிர்கொண்டு வளர்ந்தது. அந்த மறுமலர்ச்சியே சபாக்களாகியது. ஆம், சபை என்ற அந்த அமைப்பு முழுக்க முழுக்க அவர்களின் சங்கீதத்துக்கு அவர்கள் உருவாக்கிக்கொண்டது. தமிழிசையை பேணி கொடுக்கும் பொறுப்பு யாராலும் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கவில்லை.
சென்னை அன்று ஆந்திரத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் உரிய பொதுவான தலைநகரம். ஆகவே அங்கு கர்நாடக சங்கீதம் தென்னக இசையாக, தெலுங்கு மையமாக ஒலித்த இசையாக நீடித்தது இயல்பானதே. அங்கே தமிழிசை ஒலிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சரி, அதற்கான பண்பாட்டு போராட்டமும் சரி, மிக இயல்பான அடுத்தகட்ட வளர்ச்சிகள் மட்டுமே.
மறுபக்கம் கோயில்களை மையமாக்கிய பண்ணிசை மெல்ல மெல்ல கைவிடப்பட்டு அழிந்து இன்று ஒரு எளிய நினைவாக எஞ்சுகிறது. இசைவேளாளர்களால் பேணப்பட்ட விழாஇசையும் பேணுநர் இல்லாமல் அழிந்துள்ளது இன்று. அது சடங்குத்தேவைக்காக மட்டும் நிலைநிறுத்தப்படுகிறது என்றால் மிகையல்ல. இந்த அழிவுக்கு காரணம் என்ன என்று எவரும் பார்ப்பதில்லை. நமக்கு ஏதாவது இழப்பு ஏற்பட்டால் பகைவர்தானே காரணமாக இருக்க முடியும்? இனப்பகைவர்கள் அல்லாமல் நமக்கு எப்படி சிறுமை வரமுடியும்? ஆக ‘அடிடா பாப்பானை’ என்ற கூச்சல்.
பிற இசைவழிகளுக்கு என்ன நிகழ்ந்தது என அறிய நாம் பெரிதாக ஒன்றும் வரலாற்றை பார்க்கவேண்டியதில்லை, சொந்த வீட்டையும் குடும்பத்தையும் மட்டும் பார்த்தாலே போதும். முதல் விஷயம், இசையை தொழிலாகக்கொண்டவர்களுக்கு இருந்த சாதிய இழிவு. இசைவேளாளர்களை இழித்து ஒதுக்கும்போக்கு வேளாளர், முதலியார் போன்றவர்களின் மனதில் ஆழஊறியிருந்தது அந்த இழிவுநோக்கு . இன்றும்கூட மாற்றமில்லாமல் அந்த உணர்ச்சி அப்படியே நீடிக்கிறது. ஆனால் அதற்கான பொறுப்பை சாதுரியமாக பிராமணர் மேல் சுமத்திவிடுவார்கள். சாதியை அவன் தானே கற்பித்தான்?
இந்த சாதிய இழிவுநோக்கு தமிழகத்தின் வேளாளார்- முதலியார் போன்றவர்களின் ஆழ்மனதில் மெல்ல இசையே இழிவு என்ற எண்ணம் உருவாக வழியமைத்தது. விளைவாக ஓதுவார்களுக்குக்கூட வேளாளர்குலங்களில் கௌரவமான இடமிருக்கவில்லை. இப்போதும் இல்லை. பத்தொன்பதாம்நூற்றாண்டு நாவல்களில் இந்த சமூகச்சித்திரத்தை நாம் காணலாம்.
இதன்விளைவாக இசையும் கலைகளும் அவற்றை கற்பதற்கான பொருளாதார-சமூகச் சூழல்இருந்த உயர்வட்டத்தவரால் முழுமையாகவே ஒதுக்கப்பட்டன. ஒரு குழந்தையை இசைகற்க அனுப்புவதென்பது பெரும் அவமானமாகவே எண்ணப்பட்டது. நெல்லை,தஞ்சைமாவட்டங்களில் இன்றுகூட ஒரு வேளாளப்பெண் இசை கற்பது பெரும் இழிவாகவே கருதப்படுகிறது. செட்டியார்களிலும் இதே நிலைதான்.
அத்தனை பிராமணப்பெண்களுக்கும் கண்டிப்பாக அடிப்படை இசை கற்பிக்கவேண்டுமென பிராமணர்கள் எண்ண ஆரம்பித்தபின் இந்நிலை என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். பிராமணப்பெண்கள் மேடைகளில் ஆட ஆரம்பித்த பின்னர் இந்நிலை என்பதை வைத்துப்பார்த்தால் உண்மையில் சிக்கல் எவரது மன அமைப்பில் என்பதை எளிதில் காணலாம். இன்றுக்கூட மேடையில் பாடும், ஆடும் வெள்ளாளப் பெண்மணிகள் எவராவது இருக்கிறார்களா?
இந்த இழிநோக்கே பிற இரு இசைமரபுகளையும் அழித்தது. ஒவ்வொரு மரபார்ந்த இசைக்கலைஞனும்தன் பிள்ளை தன் தொழிலுக்கு வந்துவிடக்கூடாது என்று எண்ணச்செய்தது. இசையை உயிர்மூச்சாகக் கொண்டிருந்த, பெரும்புகழும் பணமும் சம்பாதித்த சீர்காழி போன்ற கலைஞர்கள்கூட இசையார்வம் கொண்டிருந்த தன் மகன் இசைக்கலைஞனாவதை விரும்பாமல் மருத்துவராக ஆசைப்பட்டார். இன்று இசைவேளாளர்கள் இசையை விட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். மாபெரும்இசைமேதைகள் வாசித்த நாதஸ்வரத்தில் இன்று குறிப்பிடத்தக்க ஒரு பெயர்கூடஇல்லை என்பதே நிலை. ஓதுவார்கள் உள்ள கோயில்கள் மிகச்சிலவே என்பதே உண்மை.
தமிழிசை இயக்கத்தை பிராமணரல்லாதார் மட்டுமே முன்னெடுத்ததாக ஒருவரலாற்றுப்பொய் இன்று மீளமீள முன்வைக்கப்படுகிறது. தமிழிசை இயக்கத்தின் மிகமுக்கியமான, மிக உரத்தொலித்த குரல் கல்கியுடையது என்பதை வசதியாக மறைத்துவிடுகிறார்கள். சலிக்காமல் கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடம் கல்கி தமிழிசைக்காக வாதாடியிருக்கிறார். தமிழில் பாடல்கள் புனைந்திருக்கிறார்.தன் மகள்களை ஆடச்செய்திருக்கிறார். தமிழிசை இயக்கத்தின் தீவிரஆதரவாளர்களில் ஒருவர் ராஜாஜி. மீ.ப.சோமு, டி.கெ.சிதம்பரநாதமுதலியார் என ராஜாஜியின் கோஷ்டி தமிழிசை இயக்கத்தில் ஒரு வலுவான தரப்பாக இருந்தது.
தமிழிசை இயக்கம் திராவிட இயக்கத்தவரால் முன்னெடுக்கப்பட்டது என்றுகூட துணிந்து அடித்துவிடுபவர்கள் இருக்கிறார்கள். அதில் இருந்தவர்களில் கணிசமானவர்கள் காங்கிரஸ்காரர்கள் என்பதும், அண்ணாமலை அரசருடன் இணைந்து தமிழிசைச்சங்கம் தொடங்க உழைத்தவர்கள், ராஜாஜி, ஆர்.கெ.சண்முகம்செட்டியார் முதலிய காங்கிரஸ்காரர்கள்.அதில் தீவிரமாக ஈடுபட்டவர்கள் சுத்தானந்தபாரதி ,பெ.தூரன் போன்றகாங்கிரஸ்காரர்கள் என்பதும் யாராவது சொல்லிக்கொண்டே இருக்காவிட்டால் வரலாற்றில் அழிக்கப்பட்டுவிடும் உண்மைகள். இன்றும் தமிழிசையில் ஒலிப்பவை சுத்தானந்தபாரதி ,பெ.தூரன் பாடல்களே. தமிழிசைச்சங்க வரலாறு
அண்ணாமலை அரசர் 1943ல் தமிழிசைச் சங்கத்தை உருவாக்கினார். மாபெரும்அரங்குகள் கட்டப்பட்டன. சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. கட்டுரைகள்எழுதப்பட்டன. ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டன. ஆனால் இன்று , முக்கால்நூற்றாண்டு தாண்டி அவ்வியக்கத்தின் நிலை என்ன?
கடந்த அரைநூற்றாண்டில் பிராமணர்கள் அல்லாத சமூகங்கள் எவையும் இசையை பொருட்டாக நினைக்கவில்லை. படிப்பையும் வணிகத்தையும் போற்றினர். பொருளாதார ரீதியாக உயர்நிலைக்குவந்தனர்.ஆனால் தங்களுடைய மரபார்ந்த கலைகள், பாரம்பரிய ஞானம் அனைத்தையுமே உதறினர். எது காசாக ஆகுமோ அதை மட்டுமே போற்றினர்.
ஆகவே இசை அவர்களுக்கு இழிவாகவே இருந்தது. அடிப்படை இசைப்பயிற்சிஅவர்களில் எவருக்கும் உருவாகவில்லை. சென்ற தலைமுறையில் இருந்த எளியஅறிமுகம் கூட பிறகுவந்த தலைமுறைகளில் இருக்கவில்லை. யோசித்துப்பாருங்கள், தமிழிசை இயக்கம் உருவான பின் சென்ற ஐம்பதுவருடங்களில் இச்சாதிகளில் இருந்து உருவாகி வந்த இசைவாணர்கள் எத்தனைபேர்?
கேட்கவும் ஆளில்லை, பாடவும் ஆளில்லை என்றால் தமிழிசை எப்படி வளரும்?சொற்பொழிவுகளைக்கொண்டு இசை வளர்க்க முடியுமா என்ன? இன்று தமிழிசைசங்கங்களின் நிகழ்ச்சி நிரல்களைப் பாருங்கள்.அங்கே பாடும் அத்தனை பாடகர்களும் மியூசிக் அக்காதமியிலும் நாரதகானசபாவிலும் பாடும் அதே பிராமணப்பாடகர்கள்தான். இங்கே தமிழில் மட்டுமே பாடவேண்டும் என்பதே வேறுபாடு. ஒருமுறை தமிழிசைச்சங்க பொறுப்பாளர் என்னிடம் சொன்னார் ‘இப்பல்லாம்சொற்பொழிவு அதிகமா வச்சுக்கிடறதில்லை சார். பிராமணாக்காழ்ப்பா எதையாவதுபேசிட்டு போய்டறாங்க. கேக்க வாரவங்க அத்தன பேரும் அவங்க. நம்மாளு சாடையாக்கூட எட்டிப்பாக்கறதில்லை.’
சென்ற ஐம்பதாண்டுக்காலத்தில் இசையின் தளத்தில் தமிழிசைக்கு முக்கியமான பங்களிப்பை ஆற்றியவர்கள் சபாக்களில் பாடும் பாடகர்கள்தான்.இதை தமிழிசை ஆய்வாளர் மம்முது எனக்களித்த பேட்டியில் சொன்னார் [சொல்புதிது] தமிழிசைப்பாடல்கள் ஏன் பாடப்படவில்லை என்பதற்கு மம்முது சொன்னகாரணம் எளிமையானது. பழங்காலத்தில் இசை குருமரபாக கற்று பாடப்பட்டது. குரு பாடிய பாட்டையே பாடுவதே வழக்கம். அதிகம்போனால் நூறு கீர்த்தனைகளே கர்நாடக சங்கீத அரங்குகளில் பாடப்பட்டன.காரணம் அவைதான் சுவரப்படுத்தப்பட்டு கிடைத்தன. கர்நாடக சங்கீதம் என்பது அர்த்தத்தை விட வெறும் ஒலிகள் மூலம் [நிரவல்] இசைக்கோவைகளை உருவாக்குவதைமுக்கியமாக நினைப்பது. பழந்தமிழ் மரபும் அதுதான் என்றார் மம்முது. அப்படிப் பாடுவதற்கு சுவரப்படுத்தப்பட்ட கீர்த்தனைகள் தேவை.
தமிழிசைப்பாடல்களை புதிதாகச் சுவரப்படுத்தி இசைக்கோவைகளுக்கு ஏற்றமுறையில் அமைத்துபாடுவது எளிதல்ல. அத்தகைய ஒரு முயற்சிக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்ததும் சாதாரணமே. எந்த நுண்கலையிலும் மாற்றங்கள் எதிர்ப்பில்லாமல் வந்துவிடாது. அதிலும் மதம் ஆசாரங்களுடன் தொடபுடைய இசை மாற்றங்களை எதிர்ப்பது மிக இயல்பே. வேண்டுமென்றால் மேலைநாட்டு காஸ்பல் இசையின் வரலாற்றை காணலாம். நாநூறு வருடமாக அது மாற்றமே இல்லாமல் நீடித்து வருகிறது. கர்நாடகசங்கீதமென்பதே அதன் முதல் மூன்று மூதாதையர்களின் சீடமரபினரால் பாடப்படுவதாக இருக்கையில் அவர்களைஎப்படி அம்மரபினர் கைவிட முடியும்?
தமிழிசைக்கு தீட்டு என்று கர்நாடக இசைக்கலைஞர்கள் சொன்னார்கள் என்றெல்லாம் இன்று அப்பட்டமான பொய்களை எழுதி வைக்கிறார்கள். ஒருவர்எழுதிய பொய்யை இன்னொருவர் மேற்கோளாக காட்டினால் அது நூலாதாரமாக ஆகிறது.பெரும்பாலான கூற்றுக்கள் ‘ஒருசமயம்’ என்று ஆரம்பிக்கும் நிகழ்வுகள்.‘என்றார்களாம்’ என முடியும் கூற்றுக்கள். தியாகராஜ சுவாமிகளின் பாடல்களை மட்டுமே பாடி அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்குச் சென்று தமிழில் சம்பந்தமே இல்லாமல் பாடி அதற்கு எதிர்ப்பு வந்ததும் அதை அரசியலாக்கி தமிழில் பாடுவது தீட்டு என்றார்கள் என்று அவதூறை பதிவுசெய்து அதை வரலாறாக ஆக்குவதையே சென்றகாலத்தில் காண்கிறோம்.
கர்நாடக சங்கீத மேடை பெரும்பாலும் கேளிக்கைத்தன்மையுடன்தான் இருந்துவந்தது. மடி ஆசாரத்துடன் அல்ல. எல்லா மேடைகளிலும் எப்போதும் தமிழ்ப்பாடல்கள் பாடப்பட்டன. சிந்து போன்ற சிலவகை நாட்டுப்புறப்பாடல்களைக்கூட மணி அய்யர் போன்றவர்கள் பாடுவதுண்டு என சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார். ஏன், இங்கிலீஷ் நோட்டு எனப்படும் மேலையிசைதுணுக்கு கூட கட்டாயமாக பாடப்படும் நிலை இருந்தது. தமிழ்நாட்டு கோயில்கள் அனைத்திலும் பக்தியிசை பாடப்பட்டு வந்தது. எங்கே எப்போது இருந்தது மேடையில் தமிழுக்குத் தீட்டு?
தமிழ் துக்கடாவாக பாடப்பட்டது என்றால் அதற்கான காரணம் வரலாற்றுபூர்வமானது. தெலுங்கு-மராட்டிய அவைகளில் உருவான இசை அது.தெலுங்கர்களால் பாடப்பட்டது. தமிழிசை என்ற அடையாளத்தை இழந்து தென்னிந்தியஇசையாக தன்னை உருவாக்கிக்கொண்ட இசை அது. அதன் மூலகுருநாதர்கள் தமிழில்எழுதவில்லை. ஆகவே சீடர்மரபு பாடவில்லை. பாடவேண்டும் என்ற எண்ணம் உருவானபோது அந்த தரப்பின் ஆகச்சிறந்த படைப்பூக்கம் கொண்ட மனங்கள் அதை நோக்கி மெல்லமெல்ல வந்து சேர்ந்தன. இதுதான் வரலாறு.
தமிழிசை இயக்கம் எழுந்தபோது எதிர்க்குரல்களில் ஒருவேளை சிலர் தமிழைப்பழித்து ஏதேனும் சொல்லியிருக்கலாம். ஆனால் அன்று கர்நாடக இசையின் மையங்களாக விளங்கிய எந்த பாடகரும் அப்படிச் சொன்னதாக ஆதாரமில்லை. மாறாகஅவர்கள் ஊத்துக்காடு வெங்கடசுப்பையர், பாரதி போன்றவர்களின் பாடல்களஅப்போதே பெரும்புகழ்பெறச்செய்திருந்தார்கள். பலர் அவர்களே தமிழ்க்கீர்த்தனைகளை இயற்றினார்கள்.
உண்மையில் இன்று அவர்களின் வழிவந்தவர்களாலேயே தமிழிசை வாழ்கிறது.மகாராஜபுரம் சந்தானம், டி.என்.சேஷகோபாலன் போன்றவர்கள்தான் அருமையான தமிழிசைப்பாடல்களை மீட்டு சுவரப்படுத்தி பாடி வாழச்செய்த முன்னோடிகள்.ஒருமுறை சென்னை புத்தகவிழாவில் சேஷகோபாலனைப் பார்த்த நாஞ்சில்நாடன்பக்திப்பெருக்குடன் அருகே ஓடிச்சென்று பணிவுடன் கைகூப்பி சிலசொற்கள் பேசி பரவசமாக திரும்பினார். ’இந்தாள் இல்லேன்னா தமிழில் எங்க பாட்டுகேக்கிறது’ என்றார்
இன்று அருணா சாய்ராம், சஞ்சய் சுப்ரமணியம்,சௌம்யா போன்றவர்கள்தமிழிசைப்பாடல்களில் மிக விரிவான ஆலாபனைகளுடன் மையப்பாடல்களைப்பாடிஇசைநிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். அவர்களின் முயற்சியாலேயே அற்புதமான தமிழிசைப்பாடல்கள் இன்று ஒலிக்கின்றன. என்னைப்பொறுத்தவரை என்மனதைக்கவர்ந்த தமிழிசைப்பாடல்கள் அனைத்தையும் இவர்களிலேயேகேட்டிருக்கிறேன். வேறு யார் இருக்கிறார்கள் பாட?
ஒரு கட்டுரையைசமீபத்தில் வாசித்தேன். வரலாறு இணையதளத்தின் தலையங்கம். சென்றவருடத்தில்சென்னை இசைப்பருவத்தில் 30 நிகழ்ச்சிகளை கவனித்த ஆசிரியர்குழு சென்னைஇசைவிழாக்களில் மிக அதிகமாக தமிழ்ப்பாடல்கள் பாடப்படுவதை சுட்டிக்காட்டுகிறது. மையப்பாடல்களே தமிழில்தான். அபூர்வமானதமிழிசைப்பாடல்கள் பாடப்படுகின்றன, அவற்றுக்கு ஆதரவும் இருக்கிறதுஎன்கிறது அக்கட்டுரை. ஆசாரமானது எனப்படும் மியூசிக் அக்காதமியில்கூடதமிழிசை ஓங்கி ஒலிக்கிறது என்கிறது.
சிக்கல் குருசரண் என்ற இளைஞர் சிக்கலான வர்ணத்தை ‘சற்றே விலகிஇரும்பிள்ளாய்’ என்ற தமிழ்ப்பாடலில் பாடியதை வியந்து பாராட்டும் ஆசிரியர்குழு அந்த முய்ற்சிகளை ஏன் இதழ்களும் அமைப்புகளும் பொருட்படுத்துவதேயில்லை என்று கேட்கிறது. அனைத்துக்கும் மேலாக தமிழிசைஅன்பர்கள் தய்வுசெய்து பாட்டுகேட்க வரவேண்டும் என்று மன்றாடி கோருகிறது.தமிழிசைச்சங்கத்திலேயே தமிழார்வலர் நடமாட்டம் இல்லை என்னும்போது மியூசிக்அக்காதமியில் என்ன எதிர்பார்ப்பது?
இந்நிலையில்தான் தமிழிசையை சபா வைத்து அழிக்கிறார்கள் என்று பிலாக்காணம்எழுகிறது. உண்மையிலேயே எனக்கு வெட்கமாக இருக்கிறது. ஏனென்றால் இந்தகேள்வியை கேட்கும் தரப்புதான் என்னுடையது என எனக்குப் படுகிறது –சாதியளவில்,சமூக அளவில்.
தன் பண்பாடு பாரம்பரியம் அனைத்தையும் அப்பட்டமான உலகியல்மோகம் காரணமாககைவிட்டுவிட்டு, தன்னைத்தானே அழியவிட்டுவிட்டு, தன் கையாலாகாத்தனம்,அக்கறையின்மை அனைத்தையும் இம்மாதிரி காழ்ப்புகளையும் அறியாமையும் கொண்டுமூடி வெடக்மே இல்லாமல் பொதுவெளியில் வந்து நிற்கும் தரப்புதான் நானா என்ற எண்ணம் வந்து குமட்டல் ஏற்படுகிறது

தமிழிசையை மீட்போம்-இரா.திருமாவளவன்

கட்டுரை


 
       
 
ஒரு முறை தமிழ் நாட்டின் திருவையாற்றில் தியாகராசர் விழா நடைப்பெற்றது. அவ்வேளை தண்டபாணி தேசிகர் அவர்கள் தம் வாயால் தம் தாய் மொழியால் தமிழில் தமிழால் பாடிவிட்டார். விழாவுக்கு வந்திருந்த வித்துவான்களும் பாகவதர்களும் முகம் சுளித்தனர். தண்டபாணியார் தமிழில் பாடப்பாட இவர்களுக்கு நெஞ்சம் பதைத்தது. வயிறு எரிந்தது. தம் மார்பில் பூணூல் தரித்தார் பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்தனர். “தியாகராசர் வளாகமே தீட்டுப்பட்டு விட்டது; தீட்டுக் கழிக்கப் பெற்றால் அன்றி இனி இம்மேடையில் நாங்கள் பாட மாட்டோ ம் என்று சீறிப்பாய்ந்தனர்; பின்னர் வெளிநடப்பும் செய்தனர். அப்படி என்ன பெருந்தவறு நடந்து விட்டது? கருநாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகள் என்று காலங்காலமாகச் சொல்லப் பெற்ற தியாகய்யர், சியாமா சாஸ்திரி, முத்துச்சாமி தீட்சிதர் ஆகியோரின் பாடல்களில் யாதேனும் ஒன்றைப் பாடியிருந்தால் உள்ளம் மகிழ்ந்திருப்பார்கள்.

இந்நிகழ்வு நடைப்பெற்றது வேறெங்குமல்ல, இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் வளர்ந்த தமிழ் நாட்டில்; தமிழ் மண்ணில். கருநாடக சங்கீதம் என்றாலே தியாகராய கீர்த்தனைகள்தான் அல்லது சமற்கிருதப் பாடல்கள்தான் தமிழ் அதற்குப் பொருத்தமில்லாத மொழி என்றெல்லாம் கதைகள் ஒரு காலத்தில் பரப்பப்பட்டன. `சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து’, எனப் பாரதியார் தமிழிலேயே பாடினார். தியாகய்யரும், சியாமா சாஸ்திரியும், முத்துச்சாமி தீட்சிதரும் தோன்றுதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பதாகவே தமிழ் இசையின் ஆதி மும்மூர்த்திகள் தோன்றிவிட்டனர். இவர்கள் தமிழர்கள் ஆனால் இந்தத் தமிழர்களை பூணூல் அணிந்தவர்களின் கண்கள் பார்க்காது. ஏனெனில் இவர்கள் சூத்திர்கள்; நீச பாசையில் பாடுகிறவர்கள்; பூதேவர்களின் செவிகள் இவற்றைக் கேட்குமா? அந்தளவுக்கு பிராமண சமஸ்கிருத வெறித்தனம் தமிழிசையும் விட்டுவைக்காமல் சீரழித்தது.

தமிழிசை மும்மூர்த்திகள் முழுக்க முழுக்கத் தமிழிலேயே பாட்டெழுதி இசையமைத்தனர். `மேளக்கார இசையோடு பாடிய அந்த மூவரின் கீர்த்தனங்களையும் பதங்களையும் கேட்டே தியாகய்யர், சியாமா சாஸ்திரி, முத்துச்சாமி தீட்சிதர் ஆகிய கருநாடகச் சங்கீத’ மும்மூர்த்திகளின் இசை உருவெடுத்தது, என்று சொன்னால் மிகையாகாது என்கிறார் இசைத்துறை அறிஞர் ப.தண்டபாணி அவர்கள்.

“ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண்
ஆயிரம் வேண்டாவோ”
“நாடித் துதிப்பவர் பங்கில் உறைபவர் நம்பர்
திருச்செம்பொன் அம்பலவாணர்,”

என்பது கி.பி 1500-1600 காலக்கட்டத்தில் பிறந்த முத்துத்தாண்டவர் எனும் தமிழனின் பாடல்.

“காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே- என்னைக்
கைத்தூக்கி யாள் தெய்வமே”

என்ற பாடல் கி.பி. 1712-1787 காலக் கட்டத்தில் வாழ்ந்த மாரிமுத்தாப் பிள்ளை எனும் தமிழனின் பாடலாகும். இப்பாடல்களைப் பழைய திரையிசைப் பாடகர்கள் எம்.எல் வசந்தகுமாரி, டி.கே. பட்டமாள் முதலானோர் பாடியுள்ளதைக் கேட்டிருக்கலாம்.

கி.பி.1712-1779 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் வாழ்ந்தவர்தான், தமிழில் முதன் முதலில் நாடகக் கீர்த்தனைகள் எழுதிய அருணாசலக் கவிராயர் ஆவார். இன்று தமிழ்க் கீர்த்தனங்களுக்கு முன்னோடிகளான இவர்களையும் இவர்கள் பாடல்களையும் புறந்தள்ளி விட்டு, `வாதாபி கணபதி பஜே’ என்றும் `மரி மரி நின்னே முரளித’ என்று சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் தமிழிர்கள் தமிழ்க் குழந்தைகள் இசைபயிலுவது வெட்கக்கேடான நிலையாகும். இது தமிழைசையை முற்றாக அழிக்க நடத்தப்படுகின்ற சூழ்ச்சியே.

தமிழனை எதிர்த்ததால் தமிழின மறுமலர்ச்சி இயக்கமும் தமிழை எதிர்த்ததால் தனித்தமிழ் இயக்கமும் தமிழிசையை எதிர்த்ததால் தமிழிசை இயக்கமும் தோன்றலாயின. பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் அவர்கள் தமிழ் இயக்கம், தமிழர் இயக்கம், தமிழிசை இயக்கம் என மூன்றாகப் பகுத்து, இம்முன்றினுள் தமிழ் இயக்கத் தோற்றுவித்த பெரியார் பார்ப்பனருள் தமிழறிவும், தமிழ்பற்றும் ஒருங்கே கொண்டவரான உயர்திரு வி.கோ. பரிதிமாற்கலைஞர் ஆவர்.

அவர் தமிழ்மாதிற்கு முகமுண்டோ என வினவிய வடமொழித் திமிர் படைத்த தோழருக்கு வடமொழி மாது வாயற்றனனே எனத் தன் மதிப்புடன் சுருக்கென்று விடையிறுத்த பெருவீரர் ஆவர். அவரது தனித்தமிழ்ப்பற்றை உண்மைத் தமிழ்ப்பற்றை அவர் தம் பெயரைத் தமிழ்ப்பெயராக மாற்றிய ஒன்றினாலேயே அறியலாம். இரண்டாவது தமிழர் இயக்கமும், இதனைக் கலை வகையில் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையும் சமய வகையில் உயர்திரு மறைமலையடிகளும் அரசியல் வகையில் பெரியார் ஈ.வே.ரா அவர்களும் தோற்றுவித்து வளர்த்தனர்.

மூன்றாவது தமிழிசை இயக்கம். இஃது இலக்கிய வகையில் இசைத் திலகம் உயர்திரு தி. இலக்குமணப் பிள்ளையாலும் துணைமை தலைமை வகையில் செட்டி நாட்டு மன்னர் பெருந்தகை அண்ணாமலை செட்டியார் அவர்களாலும் தோற்று விக்கப்பெற்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து ஓங்கி வருகின்றன.

என்று தம் தமிழிசை வாழ்க எனும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். எனவே முத்தமிழில் இசைத் தமிழ் இலக்கணத்தையும் பரவலையும் அழித்தொழிக்க முற்பட்ட ஆரிய பார்ப்பண சூழ்ச்சியின் விளைவாக தமிழிசையைத் தற்காக்க வேண்டும் எனும் வேட்கைத் தன்மானத் தமிழர்க்கு எழுந்ததில் வியப்பொன்றும் இல்லை. இருப்பினும் தமிழிசை மீட்சி முழுமைப்பெற்று விட்டதாக நாம் கருதிவிட முடியாது. இன்றளவும் தமிழ்க்குழந்தைகள் தெலுங்குச் சமற்கிருத பாடல்களையே பயிற்சியாகப் பயில்கின்றனர். பெரும்பாண்மை இசைப்பெயர்கள் இன்று தமிழாக இல்லை,

கல்யாணி, காபி, கானடா,அம்சத்துவணி, மோகனம், பகேசுவரி முதலான பெயர்கள் வடமொழிகளாகவே உள்ளன. பழந்தமிழ் மண்ணில் 11,999 அராகங்கள் இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் காட்டுகின்றன. ஆனால் இன்று முந்நூற்றுக்கும் குறைந்தவையே வழக்கில் உள்ளன. பண்டை நாளில் இசை நுணுக்கம், பஞ்சமரபு, பெருங்குருகு, பெருநாரை முதலான இசைத்தமிழ் நூல்கள் இருந்ததாகச் சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் அடியாக்கு நல்லார் கூறியுள்ளார்.

இன்று மறைந்துவிட்டதாகக் கருதப்பட்ட `பஞ்சமரபு’ எனும் நூல் ஒன்றைத் தவிர ஏனைய நூல்கள் கிடைத்ததில. `சேறை அறிவனார்’ யாழ் மரபு, வங்கிய மரபு (குழலியல்) கண்ட மரபு (குரல்) கூத்து மரபு (ஆடல்) தாள மரபு எனும் துறைகளைக் கொண்டு அவற்றுக்குரிய இலக்கணத்தை விளக்கி எழுதப்பட்ட நூலே பஞ்ச மரபு என்பதாகும். இதற்கு அந்நூலாசிரியர் இட்டபெயர் ஐந்தொகை என்பதே. 1917 ஆம் ஆண்டு தமிழிசை மேதை தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் எனும் பெருமகனார் கருணாமிர்த சாகரம் எனும் அரிய தமிழிசை ஆய்வு நூலை எழுதி வெளியிட்டார். கிடைத்தற்கரிய வரலாற்றுச் செய்திகளையெல்லாம் திரட்டி 1365 பக்கங்களில் இந்நூலை அப்பெருமகன் இயற்றியுள்ளது தமிழிசைக்குச் செய்த பெரும்பேறாகும்.

இனி,

`சரிக மபதநியென் றேழுத்தாற் றானம்
வரிபரந்த கண்ணினாய் வைத்துத் - தெரிவரிய
வேழிசையுந் தோன்று மிவற்றுள்ளே பண்பிறக்கும்
சூழ்முதலாஞ் சுத்தத் துளை’

எனும் சிகண்டி முனிவரின் பாடலில் சூழலை அடிப்படையாகக் கொண்டு அதன் ஒலிக்குறிப்புகளைத் தமிழர்கள் ச ரி க ம ப த நி என்று எழுத்துக்களால் குறித்தாகப் பொருள் விளக்கப்படுகின்றது. பண்டை நாளில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி,விளரி, தாரம் என்று இவ்விசை ஒலிகளுக்குப் பெயரிடப்பட்டுள்ளது. இதனை சுருக்கமாக கு து கை உ இ வி தா எனவும் வைத்துக் கொள்ளலாம் என்கிறார் பாவாணர். தமிழ் உயிர் நெடில் எழுத்துக்களான ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, எனும் ஏழையும் இவ்விசை ஒலிகளுக்குத் தமிழர்கள் குறியீடுகளாக அமைத்துள்ளனர். இக்காலத்திலும் பாடலில் ஆளத்தி (ஆலாபணம்) செய்யும்போது இக்குறியீடுகளைப் பாணர்கள் பயன்படுத்துகின்றனர்.

இனி, ச ரி க ம ப த நி எனும் ஒலிக்குறிப்புகள் தமிழிலிருந்தே வடமொழிக்குத் திருடப்பட்டதாகவும், தமிழ் சாயலை மறைக்க சி எழுத்துக்குப் பகரமாக `ஸி’ எனும் கிரந்த எழுத்து பயன்படுத்தப் பட்டதாகவும் அறிஞர் ப.தண்டபாணியார் குறிப்பிடுகின்றார். 700 ஆண்டுகளுக்கு முன் வடமொழியில் சங்கீத ரத்தினாகாரம் என்னும் இசை நூலை எழுதிய சாரங்கத் தேவர் என்பவரே இவ்வேழு தமிழ்க்குறியீடுகளுக்கும் வடமொழிப் பெயர்களைப் புகுத்தி, இவ்வேழும் வடமொழியிலிருந்து வந்தன எனும் புரட்டை ஏற்படுத்தினார். இந்தப் புரட்டுகளுக்கும் அழிம்புகளுக்கும் இடையேதான் தமிழிசை மெல்ல மெல்ல வளர்ந்தோங்கி வருகின்றது.

தமிழ்ப்பண்களில் பல வடமொழி பெயரால் அழைக்கப்படுவதை முன்னரே கண்டோ ம். பண்டை நாளில் தமிழ்ப்பண்கள் பலவும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனும் ஐந்திணைகளை ஒட்டியும் பருவங்களை ஒட்டியுமே உருவாக்கப் பெற்றன. இனி, பண்டைய நாளில் இன்றைய அராகங்கள் எவ்வாறு அழைக்கப் பெற்றன என்பதைக் கவனிப்போம்.
  பண்டைய தனித்தமிழ்ப் பெயர் இன்றைய பெயர்
     
1  செம்பாலை               அரிகாம்போதி (அரி+காம்+ஓதி)
2  படுமலைப்பாலை          நடபைரவி
3  கோடிப்பாலை             கரகரப்பிரியா
4  விளரிப்பாலை              தோடி
5  செவ்வழிப்பாலை             இருமத்திமத் தோடி
6  முல்லைத் தீம்பாணி (சாதாரி)      மோகனம்
7  செந்துருத்தி                   மத்தியமாவதி
8  இந்தளம்                       இந்தோளம்
9  கொன்றையந் தீங்குழல்(கொல்லி)   சுத்த சாவேரி
10   ஆம்பலந்தீங் குழல்             சுத்த தன் யாசி
11   அரும்பாலை                   சங்கராபரணம்
12   மேற்செம்பாலை               கல்யாணி
இவ்வாறு இன்றைய வடமொழிப் பெயர் கொண்ட தமிழ் அராகங்களை மீட்டெடுத்து தமிழில் இசை பயிற்சி மேற்கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை எனலாம். கிரேக்க கணக்கியல் மேதையான பித்தோகரசு தமிழ்நாட்டிற்கு வந்து தமிழர் வகுத்த ஏழ்பெரும் பாலைகளை ஆய்ந்து தம் கிரேக்க நாட்டு இசையைத் திருத்தி அமைத்தார் என வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. இவர் தமிழரின் இடை முறைத்திரிபு இசைமரபு முறையினைப் பின்பற்றி அரும்பாலை எனும் சங்கராபரணத்தை Lydic (C major diatonic scale) என்று தம் நாட்டில் வடிவமைத்துள்ளனார். அதுமட்டுமல்லாமல் அவர் கணித உலகிற்கு அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படும் வட்டத்திற்குரிய TT (பை) என்னும் குறியீட்டின் அளவு தமிழரின் தமிழிசை கணக்கிலிருந்து பெறப்பட்டதேயாகும். நீர் நிறைந்த ஒரு குளத்தில், ஒரு கல்லை எடுத்துப் போட்டால் வட்டவட்டமாக நீர் அலை பரவுவதைக் காணலாம் இதேப் போல்தான் இசையிலும் ஒலிவட்டமாக எழும்பும் எனத் தமிழிசை வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர்.

இவ்வடிப்படையிலேயே வட்ட பாலைமுறை உருவாகியது. இவ்வட்டப்பாலை முறையில் 7 சுரங்களையும் 22 சுருதிகளாக அமைத்தனர் தமிழர். ஒரு வட்டத்தின் குறுக்களவுக்கும் சுற்றளவுக்கும் தொடர்புள்ளதாகையால் வடிவக்கணக்கிற்கு இம்முறை பெரிதும் பயன்பட்டது. இதனை 22/7 என்றே வகுத்து வைத்தனர். இதனையே பித்தோகரசு தம் கணக்கியல் கோட்பாடுகளுக்குப் பயன்படுத்தினர். மார்கிரேட் ஈ.கசின்சு எலார் தம் the music of grient and accident எனும் நூலில்.

“It is historical fact, however, that about 500 B.C. Pythagoras after his travels in India Systematized the primitive music of his times and gave it new vitality by standardizing its sound combinations into seven scales which were developed downwards, not up wards, in selections of the combinations and permutations of seven sounds out of the twelve semitones in an octave which have formed ever since the fundamental sound substance of European music. These seen scales are identical with seen of the Melakatas (scales) used in south Indian music, and it is note worthy that Strabo has written that Pythagoras was influenced by India in the reforms and developments he made in the music of his time “ என்று குறிப்பிடுகிறார்.

தமிழிசை அமைப்பு முறையைப் பின்பற்றியே தம் நாட்டு இசைக்கருவியான லயரில் ஏழோடு மேற்கொண்டு ஒரு நரம்பைக் கூட்டி எட்டு நரம்புகளாக அமைத்தார் பித்தோகரசு இது கிரேக்கத்தில் செய்யப்பெற்ற புரட்சியாகவே கருதப்படுகிறது. உலக மக்கள் பலரும் தமிழிசையைப் பின்பற்றியுள்ளனர் என்பதற்கு இது ஒரு சான்று. அத்தமிழிசையை அழியாமல் தலைமுறைதோறும் காக்க வேண்டியது மானமுள்ள தமிழர்களின் கடமையாகும். தமிழிசை இயக்கம் மீண்டும் வரலாறு படைக்கத் தமிழராகிய நாம் அயல் மொழித் தாக்கத்தை அகற்றுவோம்.